7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்

தெலுங்கானா சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.

Update: 2018-12-02 23:15 GMT
ஐதராபாத்,

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் முடிவடைந்ததால் அங்கு தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

அதேநேரம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் முன்வந்தார். இதனால் இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

இங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை மக்கள் கூட்டணி என்ற பெயரில் மற்றொரு அணியாகவும் மோதுகின்றன. மேலும் பா.ஜனதா தனியாக களம் காண்கிறது. இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பா.ஜனதாவுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியோரும், காங்கிரசுக்காக அதன் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் ஏற்கனவே தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டனர்.

காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் பிரசாரம் செய்து வருகிறார். நாளை மறுநாளுடன் (புதன்கிழமை) தெலுங்கானாவில் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தெலுங் கானா அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. 5 மாநிலங்களிலும் வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

மேலும் செய்திகள்