பா.ஜனதாவுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நன்கொடை தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல்
கடந்த 2017-18-ம் ஆண்டில் ஆளும் பா.ஜனதாவுக்கு ரூ. 1000 கோடிக்கு மேல் அதிகமாக நன்கொடைகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
2019 தேர்தலை நோக்கியுள்ள நிலையில் மார்ச் 2018 வரையில் பா.ஜனதாவுடன் பிற 4 தேசிய கட்சிகளும் நிதிரீதியிலாக அதிகமான வருவாயை பெற்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் ரூ.717 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் வருவாய் 2016-17-ம் ஆண்டு ரூ. 681 கோடி ரூபாய் மட்டுமே. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2017-18-ம் ஆண்டு ரூ.291 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.262 கோடி வருவாயாக இருந்தது. தேசிய அரசியல் பெரும்படையாக திகழவில்லை என்றாலும் இடதுசாரி கட்சிகளும் 2017-18-ம் நிதியாண்டில் அதிகமான நிதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் வருவாயோடு ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் 10 சதவீதம் மட்டுமே. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.1.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்க்கட்சியான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் அவர்களுடைய ரிட்டன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது.
ஜனவரி 2-ம் தேதி வரையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியீட்டில் அதிகமான நிதியாக பா.ஜனதாவுக்கு ரூ.210 கோடி கிடைத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் ரூ.222 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியிட்டதில் 95 சதவீதம் பா.ஜனதாகவுக்கு சென்றுள்ளது.
பா.ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபால் அகர்வால் பேசுகையில், “எங்கள் கட்சிக்கு வரும் நிதி வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதில் எங்களுடைய கட்சி ஸ்திரமாக உள்ளது. இதைத்தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தணிக்கை அறிக்கை பிரதிபலிக்கிறது. நாங்கள் மக்களிடம் இருந்து நன்கொடையை ஆன்-லைன், காசோலை, நமோ ஆப் மூலமாகத்தான் பெறுகிறோம். பிறக்கட்சிகள் கருப்பு பணத்தை வைத்திருப்பது போன்று, அவர்களுடைய முழு வசூலையும் தெரிவிக்கவில்லை. எங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு காசையும் கணக்கில் வைத்திருக்கிறோம், ஆனால் பிறக்கட்சிகள் அவர்களுடைய ஆண்டு இறுதிநிலை அறிக்கையை தெரிவிப்பது கிடையாது,” என கூறியுள்ளார்.
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வருவாய் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.609 கோடி இருந்த நிலையில், அது ரூ.516 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பெருநிறுவன நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளில் அதிதமான குறைவு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டில் ரூ. 2.17 கோடியாக இருந்தது ரூ. 30 லட்சமாக குறைந்துள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழலை அடுத்து அக்கட்சியின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.