‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்கு நிதி உதவி இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மத்திய அரசு ஒதுக்கியது

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, இடைக்கால நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.353 கோடியே 70 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.;

Update:2018-12-02 05:45 IST
புதுடெல்லி, 

வங்க கடலில் உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

அந்த புயல் தமிழக நிலப்பகுதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா சென்று பின்னர் அரபிக்கடலுக்கு சென்றது. புயல் தமிழகத்தை கடந்து சென்ற போது பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

சுழன்று அடித்த புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பேரழிவு ஏற்பட்டது. புயல்-மழைக்கு 63 பேர் பலி ஆனார்கள். ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாயின.

புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை, பலா, வாழை உள்ளிட்ட லட்சக் கணக்கான மரங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அரசாங்கத்தின் சார்பிலும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

மின்சார வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நட்டு மின்சார வினியோகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து, புயல் சேத விவரங்களை தெரிவித்து, நிவாரண பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்குமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகம் வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றனர்.

இதற்கிடையே, மின்சார துறை மந்திரி தங்கமணி கடந்த 25-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள மல்லசமுத்திரத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.353 கோடியே 70 லட்சம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்து இருக்கிறது. இது 2018-2019-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்களிப்பாக வழக்கப்படும் 2-வது தவணை தொகை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சென்ற மத்திய குழுவினர் தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையின் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்