நாம் பிரிவினை காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் - கோபால கிருஷ்ண காந்தி
நாம் பிரிவினை காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் கோபாலகிருஷ்ண காந்தி செய்தியார்களிடம் கூறியதாவது:
நாம் பிரிவினை காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்; இது தேசத்திற்கே ஆபத்தானது. குல்பூஷன் ஜாதவ்க்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற கூடாது என பாக். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். காந்தி மற்றும் அம்பேத்கரின் வழிகளை கடைபிடிப்பதால் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். நான் சாதரண குடிமகன், நான் எந்த கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. என் கருத்துகள் என்னுடையவை.
இவ்வாறு அவர் கூறினார்.