சூரிய ஒளியில் இயங்கும் ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்தார் அமைச்சர்

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சூரிய ஒளியால் இயங்கும் ரயில் பெட்டிகளின் இயக்கத்தை இன்று துவக்கி வைத்தார்.

Update: 2017-07-14 13:27 GMT
புதுடெல்லி

நாட்டிலேயே முதல் முறையாக டீசல் எலக்டிரிக் மல்டிபிள் யூனிட் ரயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் மேற்கூறையில் சூரிய ஆற்றல் தகடுகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் சூரிய ஒளி ஆற்றல் ரயில் பெட்டியின் மின்சார சாதனங்களான விளக்கும் மின்விசிறி போன்றவற்றின் தேவைக்கு பயன்படுத்தப்படும். இதை துவக்கி வைத்து பேசிய சுரேஷ் பிரபு, “ இந்திய ரயில்வே தனது வண்டிகளை பசுமைமயமாகவும், சூழலுக்கு உகந்த வகையிலும் மாற்றியமைக்கும் பாய்ச்சலான செயல்களை எடுத்து வருகிறது” என்றார்.

விரைவில் மேலும் இத்தகைய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் பலவிதமான சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவுள்ளது என்றார் அமைச்சர். ஐந்து ஆண்டுகளில் 1000 மெகாவாட் சூரிய ஒளி திட்டங்களை அமைக்க இலக்கிட்டுள்ளது என்றார் அவர்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூரிய ஒளி  அமைப்பு மூலம் வருடத்திற்கு 21,000 லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டு அதன் மூலம் ரூ. 12 லட்சம் மிச்சப்படும் என்றார். இந்த அனுகூலம் அடுத்த 25 வருடங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்த அவர் அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 24 பெட்டிகளில் இந்த அமைப்பு பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்