மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத வகையில் பாஜக நெருக்கடி கொடுக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமாக இருப்பதாக எனது வழக்கறிஞர்கள் கூறினார்கள் என்று கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பிறகு அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,அமலாக்கத்துறையின் சம்மன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தலுக்கு முன்பாக சட்டவிரோதமாக எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் ஆகியோர் பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் நான் பிரசாரம் செய்யக்கூடாது என்பதாலேயே என்னை கைது செய்ய நினைக்கிறது பாஜக.
சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐயில் வழக்குகள் உள்ளன. பாஜகவில் இணைந்தால் அவர்களின் வழக்குகள் முடிந்துவிடும். பாஜகவில் சேரவில்லை என்றால் சிறைக்கு அனுப்பப்படுவர். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. ஊழல் நடைபெறவில்லை என்பது தான் உண்மை. பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மிகப்பெரிய சொத்தே எனது நேர்மை தான். எனது நேர்மையை களங்கப்படுத்த பாஜக விரும்புகிறது. அமலாக்கத்துறை எனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமாக இருப்பதாக எனது வழக்கறிஞர்கள் கூறினார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை வழக்கு பற்றி நீங்கள் பலமுறை என்னிடம் கேள்வி கேட்டிருப்பீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில், பாஜகவின் அனைத்து அமைப்புகளும் பல சோதனைகளை நடத்தி பலரைக் கைது செய்துள்ளன. இதுவரை அவர்களால் ஒரு ஊழலைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.