குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
பெங்களூருவில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தேவனஹள்ளி:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா சென்னராயப்பட்டணா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொரார்ஜி தேசாய் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஜூனைத் பாஷா (வயது 14) என்பவன் விடுதியில் தங்கி படித்து வந்தான். நேற்று முன்தினம் மதியம் ஜூனைத் பாஷா தனது நண்பர்களுடன் விடுதி அருகே உள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜூனைத் பாஷா, மற்றொரு மாணவன் குளத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று முன்தினம் காலையில் ஜூனைத் பாஷாவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் குளத்தில் இருந்து சந்தோஷ் (14) என்ற மாணவனின் உடலும் மீட்கப்பட்டது. நண்பர்களுடன் குளத்தில் குளித்து கொண்டு இருந்தபோது ஆழமான பகுதிக்கு 2 பேரும் சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து சென்னராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.