இம்பால் விமான நிலையம் மீது பறந்த யு.எப்.ஓ... ரபேல் விமானங்களை விட்டு தேடிய விமானப்படை
மர்ம பொருள் குறித்த எச்சரிக்கை காரணமாக இம்பால் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது.;
இம்பால்:
மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே, நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று (Unidentified Flying Object/யுஎப்ஓ) பறந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விமான நிலையம் பரபரப்பானது. உடனடியாக விமான சேவை நிறுத்தப்பட்டது.
அத்துடன் விமானப்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு ரபேல் போர் விமானங்கள் வரவழைக்கப்பட்டன. அந்த விமானங்களில் மிகவும் தாழ்வாக பறந்து சென்று, விமான நிலையம் மற்றும் விமானம் பறக்கக்கூடிய வான் பகுதி முழுவதும் கண்காணித்தனர். ஆனால் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் தென்படவில்லை.
அதன்பின் இம்பால் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. மர்ம பொருள் குறித்த எச்சரிக்கை காரணமாக சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது.
வெள்ளை நிறத்தில் இருந்த அந்த மர்ம பொருள், விமான நிலைய முனைய கட்டிடத்திற்கு மேற்பகுதியில் முதலில் பறந்துள்ளது. பின்னர் தெற்கு நோக்கி நகர்ந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய கோபுரத்தின் மேற்பகுதிக்கு சென்று, பின்னர் விமானம் புறப்படும் பகுதியை நோக்கி சென்றுள்ளது. 4 மணி வரை அந்த பொருள் தென்பட்டு, பின்னர் மறைந்துவிட்டதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் மீது மர்ம பொருள் பறந்தபோது பதிவு செய்த வீடியோக்கள் இருப்பதால், அதன்மூலம் விவரங்களை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.