மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கோலாருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்காருபேட்டை
வாகன சோதனை
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின்பேரில் பங்காருபேட்டை இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, காமசமுத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் சீனிவாஸ், கிருஷ்ணா மற்றும் ராமராவ் ஆகியோர் காமசமுத்திரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
2 பேர் கைது
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அப்போது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 45), பங்காருபேட்டையை சேர்ந்த லட்சுமிநாராயணா (40) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள், ஆந்திராவில் இருந்து கோலாருக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 105 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.