சத்தீஷ்காரில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-20 13:08 GMT

ராய்பூர்,

சத்தீஷ்காரின் கவர்த்தா பகுதியில் 'பைகா' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர், பாரம்பரிய 'டெண்டு' இலைகளை சேகரித்துக்கொண்டு மினி சரக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த வாகனம் பஹ்பானி பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 17 பெண்கள் 1 ஆண் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 5க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த விபத்து உள்ளூர் பழங்குடி சமூகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விபத்துக்குள்ளான அனைவரும் குயி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 'பைகா' பழங்குடி சமூகத்தினர் பீடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 'டெண்டு' இலைகளை சேகரிக்கின்றனர். 'டெண்டு' இலைகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சேகரிக்கப்படுகின்றன. இந்த இலைகள் பீடிகளை உருட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்