பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 16 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.64¼ லட்சம் மதிப்பிலான நகைகள், செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
204 செல்போன்கள் பறிமுதல்
பெங்களூரு விஜயநகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறித்து வந்த 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் 4 பேரும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.30.11 லட்சம் ஆகும்.
இதுபோல மாகடி ரோடு போலீசார் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18.75 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. கோவிந்தராஜ் நகர் போலீசார் வீடுகளின் கதவுகளை உடைத்து திருடியதாக 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11.75 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கூடுதல் கமிஷனர்
காமாட்சிபாளையா போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.3.60 லட்சம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக கைதான 16 பேரிடம் இருந்து ரூ.64.21 லட்சம் மதிப்பிலான 619 கிராம் தங்கநகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள், 210 செல்போன்கள், 9 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள், 2 கைக்கெடிகாரங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை மேற்கு மண்டல கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி ஆகியோர் பார்வையிட்டனர்.