மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதியதில் 15 பேர் பரிதாப சாவு; 40 பேர் காயம்

ஐதராபாத்தில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற அரசு பஸ் மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-10-22 20:24 GMT

படுக்கை வசதி பஸ்

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ெசாந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் உத்தரபிரதேசம் கிளம்பிய பஸ் ஒன்றில், தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் வேலை ெசய்து வந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

உத்தரபிரதேச அரசுக்கு சொந்தமான படுக்கை வசதி கொண்ட இந்த பஸ் நேற்று முன்தினம் இரவு மத்திய பிரதேசத்தின் ரிவா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் கனவில் பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

லாரி மீது மோதியது

இந்த பஸ் தியோந்தர் நகருக்கு அருகே 11.30 மணியளவில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிைரலர் லாரி ஒன்று, அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றுடன் மோதியது.

உடனே லாரி டிரைவர் திடீரென வாகனத்தை நிறுத்தினார். இதனால் பின்னால் சென்று ெகாண்டிருந்த பஸ், லாரியின் பின்பறம் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அடையாளம் தெரியாதவாறு உருக்குலைந்தது.

பஸ்சின் முன்புறம் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர். அதேநேரம் முன்புறம் இருந்த டிரைவர், கண்டக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நள்ளிரவில் பஸ்சில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், தூக்கத்திலேயே உயிரை விட்டனர். அதேநேரம் ஏராளமானோர் காயமடைந்து கதறினர். அவர்களின் அலறலால் அந்த இரவு நேரத்திலும் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடல்களை மீட்பதில் சிரமம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோகாகியை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.

பஸ் பயங்கரமாக உருக்குலைந்து இருந்ததால், டிரைவர், கண்டக்டர் மற்றும் சில பயணிகளின் உடல்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் வெல்டிங் மூலம் கம்பிகளை வெட்டி அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலும், ஒருவர் ஆஸ்பத்திரியிலுமாக மொத்தம் 15 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.

மேலும் 40 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தியோந்தர் நகரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மனோஜ் புஷ்ப் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை விரைவு படுத்தினர்.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விபத்து குறித்து மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் விளக்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

குடும்பத்துடன் தீபாவளி ெகாண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்