கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு

கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரத்து 136 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

Update: 2022-11-06 23:25 GMT

பெங்களூரு:

பணி நிரந்தரம்

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, புரசபை, கிராம பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில்தான் பணியாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வழங்கும் சம்பளம் மட்டுமே கிடைத்து வந்தது.

அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பிற பணப்பலன்களும், சலுகைகளும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். அதையடுத்து அவர்களில் பணிமூப்பு அடிப்படையில் முதற்கட்டமாக 11 ஆயிரத்து 136 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருந்த 11 ஆயிரத்து 136 தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அதற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டது.

காலமுறை ஊதியம்

இந்த நிலையில் பெங்களூரு பேடராயனபுரா தொகுதியில் அம்பேத்கர் பூங்கா, அம்பேத்கர் பவன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 136 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக நான் அறிவித்தேன். அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி அவர்களுக்கு காலமுறை ஊதியம் கிடைக்கும். மேலும் அந்த பணியாளர்களுக்கு இடர்ப்பாட்டு படியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தலித் மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும்.

அனைவருக்கும் சம உரிமை

புத்தர் அறிவாற்றல் மிகுந்தவர். கவுதம புத்தர் தனது ராஜ்ஜியத்தையே தியாகம் செய்து ஞானம் பெற்று சமூக மற்றும் ஆன்மிக மாண்புகளை உலகிற்கு பறைசாற்றினார். புத்தர் பாதையில் அம்பேத்கர் பயணித்து அனைவருக்கும் சம உரிமை கிடைக்க பாடுபட்டார். அரசியல் சாசனத்தை உருவாக்கி ஜனநாயகத்தை காப்பாற்றினார். நவீன இந்திய ஜனநாயகத்தின் பிதாமகன் அம்பேத்கர். அவரை நாம் எப்போதும் போற்ற வேண்டும்.

இட ஒதுக்கீடு என்ற தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம் என்று எனக்கு பலர் கூறினர். அதை நான் பொருட்படுத்தாமல் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளேன். மக்கள்தொகைக்கு ஏற்ப அந்த சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். புத்தர், அம்பேத்கர், வால்மீகி போன்ற மகான்கள் எனக்கு உந்துசக்தியாக உள்ளனர்.

மறக்கவே கூடாது

சமூகநீதி வெறும் பேச்சில் இல்லாமல் அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது எனது எண்ணம். தலித் மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டும்போது அவர்களின் கண்ணீரை நினைவில் கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதன்படி அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். கல்வி பயில்வது, அமைப்பு ஏற்படுத்தி கொள்வது, போராட்டம் நடத்துவதை நாம் மறக்கவே கூடாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.

உரிமைகளை பெற கல்வி மிக முக்கியம். அமைப்பு பலமாக இருந்தால் ஜனநாயகத்தில் அதற்கு மதிப்பு கிடைக்கும். நியாயமான முறையில் போராடுவது அரசியல் சாசன உரிமை. தலித் மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக முடிவு எடுத்தால் சிலர் அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த விழாவில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்