ராஜஸ்தான்: அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் 80-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிப்பு - ஒரு சிறுவன் பலி
ராஜஸ்தானில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் உடல்நலம் பாதித்த 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 80-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் 3-ம் தேதி முதல் படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்திர குப்தா கூறும்போது, "செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வார்டில் 48 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திங்கள்கிழமை இரவு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஷாகஞ்சில் வசிக்கும் 12 வயது சிறுவன் தேவ்குமார், செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனைக்குச் வந்த போது உயிரிழந்தார்" என்று கூறினார்.