மைசூருவில் தொடர் கனமழை ; கொட்டகை இடிந்து 2 பசுமாடுகள், ஒரு ஆடு செத்தன

மைசூருவில் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

Update: 2022-05-18 16:19 GMT

மைசூரு:

தொடர் கனமழை

  கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட ஏராளமான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் மைசூருவிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினமும் மைசூருவில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன.

ஏரி, குளங்கள் நிரம்பின

  மைசூரு டவுன் போகாதி, சி.எப்.டி.ஆர்.ஐ., ஆனந்த் நகர், இனக்கல், விஜயநகர் 3 மற்றும் 4-வது ஸ்டேஜ் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஏரி, குளங்கள் நிரம்பி அவற்றில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனந்த் நகரில் ஆஸ்ரய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

  அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டனர். போகாதி பகுதியில் மழை வெள்ளத்தால் சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த பாலம் உடைந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய்களும் உடைந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

பசுமாடுகள் செத்தன

  தொடர் கனமழை காரணமாக காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிராம புறங்களில் கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. சில வீடுகளின் மேற்கூரைகள் நாசமாகி இருக்கின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டன.

  நஞ்சன்கூடு தாலுகா ஹாரோபுரா கிராமத்தில் ஒரு கொட்டகை இடிந்து விழுந்து 2 பசுமாடுகள், ஒரு ஆடு ஆகியவை செத்தன. மேலும் பல பகுதிகளில் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  தொடர் கனமழையால் வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மைசூருவில் மேலும் 2 முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக மைசூரு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்