சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம்
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. வருகிற 26-ந் தேதி தேரோட்டம் தொடங்குகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. வருகிற 26-ந் தேதி தேரோட்டம் தொடங்குகிறது.
சூலக்கல் மாரியம்மன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறாமல் இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
கொடியேற்றம்
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணிக்கு மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலாவும், பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
26,27,28-ந் தேதி ஆகிய 3 நாட்கள் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கின்றன. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும் உதவி ஆணையாளருமான கருணாநிதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் சூலக்கல் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.