இந்தியாவை உலகமே பேசும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உங்களுடையது

இந்தியாவை உலகமே பேசும் அளவுக்கு உச்சத்துக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு உங்களுடையது என்று ஊட்டி பள்ளி விழாவில் மாணவ-மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.

Update: 2022-05-18 15:02 GMT
ஊட்டி

இந்தியாவை உலகமே பேசும் அளவுக்கு உச்சத்துக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு உங்களுடையது என்று ஊட்டி பள்ளி விழாவில் மாணவ-மாணவிகளுக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  அறிவுரை வழங்கினார்.

கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்துள்ளார். ஊட்டி லாரன்ஸ் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவின் எதிர்காலத்திற்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் வாசலில் இருக்கும் இளம் மாணவர்களுடன் பேசும் வாய்ப்பை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாட்டின் இளைஞர்களால்தான் அதன் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவாகும் வாசலில் நிற்கிறது. 
இந்தியாவை பற்றி உலகமே பேசும் அளவுக்கு புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். கல்வி மற்றும் இணை பாடத்திட்ட கற்றலின் கலவையான ஒரு முழுஅளவிலான கல்வியை பெறுவதற்கு நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். 

பொறுப்பும், கடமையும்

உங்களைப் போன்ற அதிர்ஷ்டமும் சலுகையும் இல்லாத பல குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, உங்கள் சமூகத்தின் மீது உங்களுக்கு அதிக பொறுப்பும், கடமையும் உள்ளது. இந்த வரலாற்று புனிதமான நிறுவனத்தில் கற்றுக்கொண்ட நீங்கள், வசதிவாய்ப்பு குறைவாக உள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற்காக, நீங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூரில் பழங்குடியினர் கிராமங்களின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது முதல் பழுதடைந்த வீட்டை மீண்டும் கட்டித்தருவது வரையிலான திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் ஏற்கனவே சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்து வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கேரளாவின் வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவியதுடன், அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கும் பள்ளியை மீண்டும் கட்டுவதற்கு உதவியதையும் அறிந்து பெருமைப்படுகிறேன்.  உங்களது உன்னத பணியை தொடருங்கள். நீங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 

உண்மையான தலைவர்

ஆணவத்திற்கு ஒருபோதும் இடமளிக்காதீர்கள், சத்தியத்தின் முகத்தில் ஒருபோதும் பொய்யை விட்டுவிடாதீர்கள். சமரசத்திற்கான அழுத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்காதீர்கள். வாழ்க்கையில் சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு ஒருபோதும் அடிபணியாதீர்கள். ஒரு மனிதனாக உங்கள் கண்ணியத்தை கெடுக்கும் எதற்கும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
நான் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் நீங்கள் அடிபணியாவிட்டால், நீங்கள் ஒரு சிறந்த மனிதராக மட்டுமல்ல. உண்மையான தலைவராகவும், உண்மையான மகனாகவும், உண்மையான இந்தியாவின் மகளாகவும் மாறி நம் நாட்டை உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் எஸ்.பி.அம்ரித், பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் சந்திரா, சரஸ்வதி, தலைமை ஆசிரியர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் 19-ந்தேதி (வியாழக்கிழமை) காலை வெங்கையா நாயுடு ஊட்டி ராஜ் பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

மேலும் செய்திகள்