இந்த ஆண்டில் இதுவரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் விபத்துகளில் 28 பேர் சாவு; அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டில் இதுவரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் விபத்துகளில் 28 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-18 14:50 GMT
பெங்களூரு:

28 பேர் சாவு

  கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகத்திற்குள்ளும், வெளிமாநிலங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் 71 விபத்துகளை ஏற்படுத்தி உள்ளன. அதில் 28 பேர் இறந்து உள்ளனர். 67 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

  இதில் இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் பெரும்பாலான விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் தான். 41 முதல் 50 வயதுக்கு உட்பட்ட அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் இந்த ஆண்டில் 39 சதவீதம் விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். 36 முதல் 40 வயதுக்கு உட்பட்ட டிரைவர்கள் 23.2 சதவீதம் விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். புதிதாக பணிக்கு சேர்ந்த அதாவது 21 முதல் 30 வயதுக்கு உட்பட்ட டிரைவர்கள் மட்டும் 1.2 சதவீதம் விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர்.

டிரைவர்கள் உணர வேண்டும்

  விபத்துகளில் உயிரிழந்த 28 பேரில் 44 சதவீதம் பேர் இருசக்கர வாகன ஓட்டிகள். 19 சதவீதம் பேர் பாதசாரிகள். விபத்துகள் பெரும்பாலும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடப்பது தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விபத்துகளை ஏற்படுத்திய 35 டிரைவர்களுடன் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் விபத்துக்கான காரணங்களை டிரைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்பின்னர் அன்புகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

  டிரைவர்களின் கவனக்குறைவு, மோசமான சாலைகள், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்து உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் குறித்து எங்களது டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப நிலை என்ன என்பதை டிரைவர்கள் உணர வேண்டியது அவசியம்.

தற்காலிகமாக பயன்படுத்த...

  சமீபத்தில் மைசூரு ரோட்டில் விபத்தில் சிக்கிய கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்சில் பயணித்து காயம் அடைந்த பயணிகளின் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். காயம் அடைந்தவர்களுக்கு சக்கர நாற்காலி தேவைப்பட்டாலும் அதை வழங்கவும் தயாராக உள்ளோம். கே.எஸ்.ஆர்.டி.சி.யில் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது.

  இதனை சரிசெய்ய ஓய்வுபெற்ற டிரைவர்களை தற்காலிகமாக பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். நிதி பிரச்சினை காரணமாக புதிய டிரைவர்களை பணியில் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது எங்களது தினசரி வருமானம் ரூ.10 கோடியை எட்டியுள்ளது.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்