தேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்- திறந்தவெளி பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி பேச்சு
தேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி பேசினார்.
கோத்தகிரி
தேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி பேசினார்.
மென்திறன் பயிற்சி முகாம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில், மென்திறன்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கோத்தகிரியில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தின் உறுப்பு சமுதாய கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பார்த்தசாரதி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் தவிர 3-வதாக அவர்களின் தேவைகேற்ப ஒரு மாநில மொழியோ அல்லது வெளிநாட்டு மொழியோ பயில வேண்டும். மாணவர்களை ஒழுங்குபடுத்தினாலே இந்தியா வல்லரசாகும். மாணவர்களுக்கு தொழில் முனைதல் என்ற பாடதிட்டத்தை சேர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பிறருக்கு வேலை வழங்குபவர்களாக மாற்ற முடியும்.
எதிர்கால படிப்பு
இந்திய தேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் 54 சதவீத தமிழக மாணவர்கள் என்ற நிலையில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோத்தகிரியில் முதற்கட்டமாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், பள்ளி மாணவர்களின் எதிர்கால படிப்பு வாய்ப்புகள் பற்றியும், படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்வதற்கு தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம்கள் தொடரும்
முதல் கட்ட பயிற்சியில் 60 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் இது போன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாமில் தலைமை ஆசிரியை மோட்ச அலங்கார மேரி, நீலகிரி மாவட்ட புனித மரியன்னை ஆலய பங்கு தந்தை ஞான தாஸ், கோத்தகிரி பெண்கள் நல அறக்கட்டளை தலைவர் ஜெபராஜ், தமிழ்நாடு திறந்தவெளிபல்கலை கழக கோத்தகிரி உறுப்பு கல்லூரியின் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.