நிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுப்பு

திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோவிலில் நிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது.;

Update: 2022-05-18 14:33 GMT
திருச்சி, மே.19-
திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோவிலில் நிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது.
நெடுங்களநாதர் கோவிலில் ஆய்வு
திருச்சி-தஞ்சை சாலையில் துவாக்குடிக்கு அருகே வாழவந்தான்கோட்டையை அடுத்த திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோவிலில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் மு.நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அர.அகிலா ஆகியோர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல், சிவாச்சாரியார் ரமேஷ் ஆகியோரின் உதவியுடன் களஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சோழர்கால கல்வெட்டு சிலவற்றையும், அந்த காலத்தில் நிலம் அளக்க பயன்பட்ட அளவு கோலையும் கண்டறிந்தனர்.
இது குறித்து ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் கலைக்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழங்கால அளவுகோல்
இந்த கோவிலில் மைய ஆய்வாளர்களால் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட முற்சோழர், முற்பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய ஆய்வில் மேலும் சில புதிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
தற்போது, கிடைத்த கல்வெட்டால் அக்காலத்தே கழஞ்சுப் பொன்னுக்கு ஆண்டுதோறும் 2 கலம் நெல் வட்டியாக கிடைத்தது தெரியவருகிறது. கோவில் பெருமண்டபத்தின் தென்புறத்தே அக்காலத்தே நிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டுள்ள அதன் நீளம் 4.40 மீட்டர். இது இந்த பகுதியிலிருந்த நன்செய் நிலங்களை அளக்க பயன்படுத்தப்பட்டவையாகும்.
 இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்