தூத்துக்குடியில் புதிய பெண் தொழில்முனைவோருக்கு விலையில்லா வெள்ளாடு: கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

தூத்துக்குடி அருகே புதிய பெண் தொழில் முனைவோருக்கு விலையில்லா வெள்ளாடுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.

Update: 2022-05-18 14:08 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே புதிய பெண் தொழில் முனைவோருக்கு விலையில்லா வெள்ளாடுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.
வெள்ளாடு
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் புதிய பெண் தொழில் முனைவோருக்கான விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி 82 பேருக்கு தலா 5 வெள்ளாடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழில் முனைவோர்
ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயலபடுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி 1200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் 100 சதவீதம் மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 6 ஆயிரம் வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் சிறந்த முறையில் அரசால் வழங்கப்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து ஆடுகளைப் பெருக்கி தொழில் முனைவோராக பயன்பெற வேண்டும். இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு அரசால் இலவசமாக காப்பீடு செய்யப்பட்டு உள்ளன. கொட்டகை கட்டும் வகைக்கு பயனாளிகள் ஒவ்வொருக்கும் ரூ.1000 வீதம் வழங்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், கால்நடை துணை இணை இயக்குனர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பயனாளிகளுக்கு சிறந்த முறையில் ஆடுகளை வளர்ப்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்