மரத்வாடாவில் தண்ணீர் பஞ்சம் -547 கிணறுகளை கையகப்படுத்தியது மண்டல நிர்வாகம்
மரத்வாடா மண்டலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக மண்டல நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது. அந்த கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அவுரங்காபாத்,
மரத்வாடா மண்டலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக மண்டல நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது. அந்த கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தண்ணீர் பஞ்சம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள மரத்வாடா மண்டலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. இருப்பினும் அந்த மண்டலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் பருவமழை பாராமுகமாகவே இருந்துவிட்டது. வேண்டிய அளவுக்கு மழை பெய்யாததால் அப்பகுதியில் தற்போது பஞ்சம் தலை தூக்கி உள்ளது.
இந்த மண்டலத்தில் பல கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றன. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளையை சரிவர செய்ய தேவையான நடவடிக்கைகளை மரத்வாடா மண்டல நிர்வாகம் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கிணறுகளை மண்டல நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது.
547 கிணறுகள்
இதுவரை சுமார் 547 கிணறுகளை மண்டல அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை 253 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து உள்ளது.
இதில் அதிகபட்சமாக ஹிங்கோலியில் 245 கிணறுகளும், பீட்டில் 105 கிணறுகளும், நாந்தெட்டில் 82 கிணறுகளும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கிணறுகளில் இருந்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
-----------