தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் ரெயில் மறியல் போராட்டம்

தூத்துக்குடியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட்டை அடைத்து வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-18 12:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட்டை அடைத்து வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேட் மூடல்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து மீளவிட்டானுக்கு மடத்தூர் வழியாக ரெயில் பாதை அமைந்து உள்ளது. இந்த ரெயில் பாதையில் அடிக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ரெயில்கள் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் ஒரு ரெயில் சரக்கு ஏற்றிக் கொண்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. இதனால் காலை 9 மணிக்கு மடத்தூர் ரெயில்வே கேட்டை பூட்டி உள்ளனர். நீண்ட நேரமாகியும் ரெயில் வரவில்லை. காலை 10.10 மணிக்கு சரக்கு ரெயில் அங்கு வந்து உள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட்டை பூட்டி வைத்ததால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.
ரெயில் மறியல்
இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன் ஆகியோர் தலைமையில் தபால் தந்தி காலனி, முருகேஷ்நகர், மடத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு ரெயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 
அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்