பழையகாயல் கூட்டுறவு சங்க முறைகேடு: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி:
பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
மனு
பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் குணசேகரன், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பொன்ராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகப்பாண்டி, வைகுந்த் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். அங்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
முறைகேடு
அந்த மனுவில், பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுநகைக்கடன் திருட்டு, பயிர் கடன் முறைகேடு, மகளிர் சுய உதவிக்குழு முறைகேடு, விவசாய கூட்டு பொறுப்புக்குழு முறைகேடு, தள்ளுபடி தகுதிக்கு மீறிய கடன் தொகை, போலி நகைக்கடன் அட்டை வழங்குதல், மகளிர் குழு மூலம் மோசடி போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.15 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை தணிக்கை மூலம் சங்கத்தில் 146 பயிர் கடன்கள் முறைகேடாக வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மீதும் துணைப்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் துணைப்பதிவாளர் தவறு செய்த அதிகாரிகள், பணியாளர்கள், தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், மோசடி குறித்து புகார் அளித்த துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தடை
தற்போது கூட்டுறவு சட்டம் விதிகள் பிரிவு 81-ன் கீழ் விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணையை தங்களது நேரடி கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். சங்க ஆவணங்களை திருத்துவதற்கும், திருடுவதற்கும் முயற்சிகள் நடந்து வருவதால், சங்க நிர்வாகத்தின் விசாரணையில் தலையிட துணைப்பதிவாளருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.