கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்

எடப்பாடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-18 02:04 GMT
எடப்பாடி:
எடப்பாடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்கள் மோதல்
எடப்பாடி ஏரிரோடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42), தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று எடப்பாடியில் இருந்து சங்ககிரிக்கு தனியார் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 
எடப்பாடியை அடுத்த கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ் சென்றது. அதே நேரத்தில் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ஒன்று எடப்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 55 மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர். இந்த 2 பஸ்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. 
இந்த விபத்தில் சிக்கிய தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது. அதே நேரத்தில் கல்லூரி பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் இரு பஸ்களின் முன்பகுதிகளும் ெநாறுங்கி சேதம்அடைந்தன.
20 பேர் காயம்
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், எடப்பாடி, கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த தனியார் பஸ் டிரைவர் அருணாச்சலம் மற்றும் தனியார் பஸ்சில் பயணம் செய்த இருப்பாளியை சேர்ந்த சின்னகண்ணன் (60) ஆகிய இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இதேபோல் கல்லூரி பஸ்சில் வந்த 3 மாணவ- மாணவிகளும், தனியார் பஸ்சில் வந்த பயணிகள் 3 பேரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 விபத்து குறித்து தகவலறிந்த சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன், எடப்பாடி தாசில்தார் லெனின், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், வனஜா ஆகியோர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் விபத்து குறித்தும் விசாரித்தனர்.

மேலும் செய்திகள்