கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது
அயோத்தியாப்பட்டணம் அருகே கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 44). இதே கிராமத்திலுள்ள இவரது மளிகை கடைக்கு முன்பாக வைத்திருந்த கண்காணிப்பு கேமரா நேற்று முன்தினம் இரவு மர்மநபரால் சேதப்படுத்தப்பட்டது. கேமரா காட்சிகள் பதிவாகும் சேமிப்பு கருவியை ஆய்வு செய்தபோது, கேமராவை சேதப்படுத்தியது அதே கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ஆசைத்தம்பி, அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமூர்த்தி அப்படி தான் சேதப்படுத்துவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசைத்தம்பி கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர்.