கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்ற 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-18 02:00 GMT
சேலம்:
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்ற 72 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்
சேலம் அருகே அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் நேற்று நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று குடம், பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 49 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.
குடியேறும் போராட்டம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 3 தலைமுறையாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அய்யம்பெருமாம்பட்டியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனைக்கு என நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து அதை மற்றவர்களுக்கு வழங்கி விட்டார். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்து உள்ளோம். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களுக்கு வீடு இல்லாத காரணத்தால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முடிவு செய்தோம் என்றனர்.
சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் மாலையில் விடுதலை செய்தனர். ஆனால் அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறாமல் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், வீடு மற்றும் பட்டா வழங்குவது தொடர்பாக உங்களது பகுதிக்கு இன்று (புதன்கிழமை) நேரில் வந்து ஆய்வு செய்யப்படும் என்றார். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்