அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை்; ஆசிரியர் கைது

மண்டியாவில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்;

Update:2022-05-18 02:28 IST
மண்டியா: மண்டியாவில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சந்தேபாசனஹள்ளியை அடுத்த கங்கனஹள்ளி கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சந்திரசேகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 31-ந்தேதி அந்த பள்ளியில் படிக்கும் 9 வயது மாணவி ஒருவளுக்கு ஆசிரியர் சந்திரசேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
இதனால் அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது ஆசிரியர் சந்திரசேகர், தன்னை கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி தெரிவித்தாள். 

ஆசிரியர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், இதுகுறித்து அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர், வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் தெரிவித்தார். இதனால் ஆசிரியர் சந்திரசேகரை பணி இடைநீக்கம் செய்து வட்டார கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். 

மேலும் இதுதொடர்பாக இக்கேரி போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர். அவா், பள்ளியில் மேலும் சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்