நெல்லை அருகே கல்குவாரி விபத்து: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டம்

நெல்லை அருகே கல்குவாரி விபத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்;

Update: 2022-05-17 20:56 GMT
நெல்லை:
நெல்லை அருகே கல்குவாரி விபத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகை 
நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14-ந்தேதி இரவில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கினார்கள். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து, பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழர் உரிமை மீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர செயலாளர் துரை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்து வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள், கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-
ரூ.1 கோடி இழப்பீடு
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சிக்கி உயிரிழந்த அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சமும், குவாரி உரிமையாளர் சார்பில் ரூ.50 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய கனிமவளத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
கல்குவாரியில் சிக்கி இறந்த காக்கைகுளத்தை சேர்ந்த தொழிலாளியின் அண்ணனை கல்குவாரி உள்ளே வைத்து அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்த சேரன்மாதேவி போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்