புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து

புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-05-17 20:48 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே துங்கபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில், புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். விழாவில் அரியலூரில் இருந்து மருதையான்கோவில், நல்லரிக்கை, துங்கபுரம், வயலப்பாடி, ஓலைப்பாடி வழியாக வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரி வரையிலான புதிய வழித்தடம் மற்றும் கூடுதல் பஸ் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதேபோல் வயலூரில் நடந்த விழாவில் அகரம்சீகூரில் இருந்து வயலூர், கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர் வழியாக குன்னம் வரையிலான புதிய வழித்தட பஸ் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதில் துங்கபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பஸ் அரியலூரில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் வேப்பூர் சென்றடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தில் அரியலூர் செல்லும். வயலூரில் தொடங்கி வைக்கப்பட்ட அரசு டவுன் பஸ் திட்டக்குடியில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு அகரம்சிகூர், வேப்பூர், பரவாய் கள்ளம்புதூர் வழியாக குன்னம் சென்றடையும். அதேபோல் மாலை 6.45 மணிக்கு குன்னத்தில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு மேற்கண்ட ஊர்களின் வழியாக திட்டக்குடி சென்றடையும்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகளுடன் பஸ்சில் பயணம் செய்த அமைச்சர், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், கூடுதல் பஸ் சேவை வழங்க வேண்டும் என்பது வேப்பூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்