தெருவிளக்கு ஒளிருமா?
பெருந்துறை சோளிபாளையம் திருவாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி சேரன்நகர். இங்குள்ள முதல் வீதி மற்றும் 2-வது வீதியில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் வீதிகளில் இரவு நேரங்களில் சிறுமிகள், பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே தெருவிளக்கு எரிய மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், ஈரோடு.
குண்டும், குழியுமான ரோடு
தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லக்கூடிய மெயின் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மழை பெய்தால் ரோட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாமரைக்கரை.
சாய்ந்து விழும் நிலையில் மின் கம்பம்
கடத்தூர் போலீஸ் நிலையம் அருகே ரோட்டோரம் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின் கம்பம் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. ஆனால் இந்த மின் கம்பம் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின் கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க 2 மூங்கில் கம்புகள் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. எனவே இந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்து ஏதேனும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமார், கொடிவேரி.
ரோட்டில் ஓடும் கழிவுநீர்
கொடுமுடி பேரூராட்சிக்கு உட்பட்ட க.ஒத்தக்கடையில் இருந்து கொடுமுடி செல்லும் மெயின் ரோட்டோர சந்து பகுதியில் 15 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீர் ஆகியவை சந்தின் வழியாக வெளியேறி மெயின் ரோட்டில் செல்கிறது. இதேபோல் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகளின் கழிவு நீர் செல்வதற்கும் சாக்கடை வசதி இல்லை. இதனால் அந்த கழிவுநீரும் மெயின் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், க.ஒத்தக்கடை.
சிக்னல் செயல்பாட்டுக்கு வருமா?
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கவுந்தப்பாடி நால்ரோடு அமைந்து உள்ளது. இந்த நால்ரோட்டில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னலை சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கவுந்தப்பாடி.
பாராட்டு
பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி ஸ்ரீஅம்மன் கார்டன் பகுதி முதல் வீதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர்கள் குழி தோண்டி கழிவுநீரை வெளியேற்றி வந்தனர். இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து முதல் வீதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
கவுஸ் மைதீன், வேப்பம்பாளையம்.
நன்றி
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் சிகிச்சை பெற சுகாதார நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள சத்தியமங்கலம் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து சிக்கரசம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
டி.சசிகுமார், சிக்கரசம் பாளையம்.