பெரம்பலூர்:
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதல்-அமைச்சர் முகவரியின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் இயந்திரப் பொறியியல் துறை பல்வேறு துறைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் கலந்துரையாடினார். மேலும் வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் கடனுதவி வழங்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போர்வைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பெரம்பலூர் சாய்பாபா கோவில் அருகே விளாமுத்தூர் முதல் நெடுவாசல் கிராமம் வரை மருதையாற்றினை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.