இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Update: 2022-05-17 20:20 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், கருப்பூர் சேனாபதி கிராமத்தில் உள்ள தண்டபானி சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விஸ்தரிப்பு செய்து, சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று கீழப்பழுவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், அந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் ஏற்கனவே சுமார் 10 ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் மீண்டும் விஸ்தரிப்பு செய்து சுண்ணாம்புக்கல் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், இயற்கை வளம் தோண்டி எடுக்கப்படுவதால் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்ேவறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றதோடு, மாசுக்கட்டுப்பாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர், அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு புதுடெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்