குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்

அதிராம்பட்டினம் அருகே குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிய தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-17 19:59 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அருகே குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிய தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
குளத்தில் மூழ்கினர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வின்ெசன்ட்(வயது 54). கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஸ்டெல்லா(47). இவர்களது மகள்கள் வின்சி(21), பெனினாள்(19).
நேற்று முன்தினம் மாலையில் ஸ்டெல்லா அதே பகுதியில் உள்ள வண்ணான் குளத்திற்கு தனது இரு மகள்களுடன் குளிக்க சென்றார். குளத்தின் கரையில் நின்று குளித்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக பெனினாள் தண்ணீரில் மூழ்கினார். தங்கை தண்ணீரில் மூழ்கியதை பார்த்த வின்சி தங்கையை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். 
மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்
தனது கண் எதிரில் மகள்கள் இருவரும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த அந்த தாய் உள்ளம் பதறியது. இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா கொஞ்சம்கூடி யோசிக்காமல் தண்ணீரில் குதித்து மகள்கள் இருவரையும் கரைப்பகுதிக்கு தள்ளிவிட்டார். ஆனால் அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் தத்தளித்தார். 
இதனையடுத்து சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் ஓடி வந்து குளத்தில் குதித்து ஸ்டெல்லாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டெல்லா இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். 
சோகம்
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாவின் உடலை அதே ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளத்தில் மூழ்கிய தனது மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்