சிங்கப்பூரில் வசிப்பவரிடம் ரூ.1 கோடி மோசடி
தென்னந்தோப்புடன் கூடிய நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சிங்கப்பூரில் வசிப்பவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.;
தஞ்சாவூர்:
தென்னந்தோப்புடன் கூடிய நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சிங்கப்பூரில் வசிப்பவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
நிலம் விற்பனை
சிங்கப்பூரில் வசித்து வருபவர் பஜ்ருதீன். இவருடைய பவர் ஏஜெண்டாக கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் அன்பு நகரை சேர்ந்த கமால் பாஷா என்பவரின் மகன் முகமது ரிபாஸ் இருந்து வருகிறார். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது 3 பேரும் சேர்ந்து, தென்னை மரங்களுடன் கூடிய தோப்பு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாக கூறி யாராவது வாங்குவதற்கு ஆள் இருந்தால் தெரிவியுங்கள் என கூறி உள்ளனர். பின்னர் அவர்கள் முகமது ரிபாஸ் வாயிலாக சிங்கப்பூரிலுள்ள பஜ்ருதீனிடம் இது குறித்து பேசியுள்ளனர்.
ரூ.1 கோடி மோசடி
அப்போது தென்னந்தோப்புடன் கூடிய நிலம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரத்து 100-க்கு விலை பேசப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணத்தை பல தவணைகளில் பஜ்ருதீன் கொடுத்துள்ளார். ஆனால் 3 பேரும் தென்னந்தோப்புடன் கூடிய அந்த இடத்தை இதுவரை அவருக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை. பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பஜ்ருதீன், தனது பவர் ஏஜெண்டு முகமது ரிபாஸ் வாயிலாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் தென்னந்தோப்புடன் கூடிய நிலத்தை விற்பனை செய்வதாக கூறி 3 பேரும் ரூ 1 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரத்து 100 பணம் பெற்று இதுவரை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
3 பேர் மீது வழக்கு
அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிமதி மற்றும் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.