தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவைக்குழுவினர் ஆய்வு
தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவைக்குழுவினர் ஆய்வு
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவைக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரெயில் பயணிகள் சேவைக்குழு
மத்திய ரெயில் பயணிகள் சேவைக்குழுவினர், தலைவர் ரமேஷ்சந்திரா ஜெயின் தலைமையில் நேற்று ரெயில் மூலம் தஞ்சை வந்தனர். இந்த குழுவில் இடம்பெற்று இருந்த ஜெயந்திலால் ஜெயின், பொன்.பாலகணபதி, பிரமோத்குமார்சிங், பபிதா பார்மர், மோகன்லால்ஹிகாரா ஆகியோரை திருச்சி கோட்ட வணிக உதவி மேலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.
இந்த குழுவினர் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
பயணிகளிடம் கேட்டறிந்தனர்
ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில் உள்ள கழிவறை, ெரயில் நிலையத்தில் வை-பை வசதிகள், பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூறைகள், மின் விளக்குகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம், அதன் விலை ஆகியவற்றை விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்போது பயணிகள் சிலர் மின்விசிறி, இருக்கைகள் போதியளவு இல்லை எனவும், 2-வது பிளாட்பாரத்தில் மேற்கூரையை நீட்டிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனை குழுவின் உறுப்பினர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ரெயில் பயணிகளிடம் குடிநீர், தூய்மை வசதிகள் முறையாக உள்ளதா? என கேட்டறிந்தனர்.
ரெயில் பயணிகள் சங்கம்
முன்னதாக தஞ்சை வந்த ரெயில் பயணிகள் சேவைக்குழுவினரை தஞ்சை ரெயில் பயணிகள் சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் ராஜதிருமேனி, புலவர் செல்லகணேசன், வக்கீல் முகமதுபைசல் ஆகியோர் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் இருந்து பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் ரெயிலையும், திருச்சியில் இருந்து ஹவுரா இடையே இயக்கப்படும் ரெயிலையும் தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். திருப்பதியில் இருந்து மதுரைக்கு தஞ்சை வழியாக வாரந்தோறும் இயக்கப்படும் விரைவு ரெயிலை தினமும் இயக்க வேண்டும்.
தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்
திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். மின்மயமாக்கல் பணி முடிந்து விட்டதாலும், இரட்டைப் பாதை வசதி இருப்பதாலும், தஞ்சை மற்றும் திருச்சி இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரெயில்கள் இயக்க வேண்டும். தஞ்சை-மும்பை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.
கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தைப் போலவே பயணிகள் ரெயில்களின் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மயிலாடுதுறை-திருநெல்வேலி இடையேயான ரெயிலை விரைவு பயணிகள் ரெயிலாக மாற்றம் செய்ய வேண்டும். (இந்த ரெயில் திருச்சி வரை உள்ள அனைத்து ெரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும்.)
கூடுதல் பெட்டிகள்
அதிக பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தஞ்சை வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.