மாயமான வாலிபரை கண்டுபிடிக்க ஆதார் ஆணையம் உதவ வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாயமான வாலிபரை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கில் ஆதார் ஆணையம் உதவுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-17 19:20 GMT
மதுரை
மாயமான வாலிபரை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கில் ஆதார் ஆணையம் உதவுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மகன் மாயம்
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த முத்துபாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வேலைக்கு சென்று மாயமான எனது மகன் அஜித்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆதார் ஆணையம்
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மகன் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண், நர்சிங் நுழைவுத் தேர்வில் பங்கேற்ற ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் எண் கிடைத்துள்ளது. ஆதார் ஆணையத்தில் மேலும் விவரங்கள் பெறவேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆதார் எண் அடிப்படையில் அந்த பெண்ணின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை ஆதார் ஆணையம் கருப்பாயூரணி போலீசாருக்கு வழங்க வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் போலீசார் தங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்