வலம்புரிவிளை உரக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

நாகர்கோவிலில் உள்ள வலம்புரிவிளை உரக் கிடங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

Update: 2022-05-17 19:14 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள வலம்புரிவிளை உரக் கிடங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
உரக்கிடங்கில் தீ 
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை உரக் கிடங்கு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வீடு-வீடாக சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுவது வழக்கம். அவ்வாறு ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் உரக்கிடங்கின் பிரதான வாயிலின் வடக்கு பக்கத்தில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மள, மளவென மற்றப்பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
அணைக்க போராட்டம்
உடனே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ஜான்வின்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தீயில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்தும் ஒரு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது. இரண்டு வண்டிகளில் இருந்தும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்