ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் தண்டபாணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி குணசேகரன், மண்டல தலைவர் சீனிவாசலு, நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிவராஜ், குமார், கெம்பண்ணா, ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் சரவணபவா நன்றி கூறினார்.
அகவிலைப்படி
இந்த தர்ணா போராட்டத்தின் போது, மருத்துவ காப்பீட்டில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியான 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை, காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்டோருக்கு ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைவரையும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவர வேண்டும். மத்திய அரசு வழங்கியது போன்று 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.