வங்கி கணக்கில் இருந்து ரூ.57 ஆயிரம் அபேஸ்

சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.57 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-17 18:47 GMT

விழுப்புரம், 

செஞ்சியை சேர்ந்தவர் சையத்பரித் (வயது 31). இவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக செஞ்சி கூட்டுசாலையில் இருந்து பஸ் ஏறியபோது பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர், சையத்பரித்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அபேஸ் செய்து விட்டார். இருப்பினும் அந்த செல்போனில் இருந்த ஒரு எண்ணை சையத்பரித், தனது செஞ்சி கிளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியுடன் இணைத்து போன்பே, கூகுள்பே, பேடிஎம் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் ஏ.டி.எம். மையத்தில் சையத்பரித் பணம் எடுக்க சென்றபோது அவரது தொலைந்துபோன செல்போனை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர், சையத்பரித்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.57,710-ஐ எடுத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சையத்பரித், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்