எருமப்பட்டி அருகே அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
எருமப்பட்டி அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வரகூர் அங்கான்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம், மாணிக்கவேலூர், மூலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
வரகூர் கால்நடை மருந்தகத்தில் தினமும் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளின் விவரம், கால்நடைகளுக்கான மருந்துகளின் இருப்பு, மழை காலங்களில் கால்நடைகளுக்கு நோய்கள் பரவமால் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உதவி கால்நடை மருத்துவரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
இதேபோல் வரகூர் அங்கன்வாடி மையம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் ஆகிய 2 மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள், தேவையான அளவு இருப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
குடிநீர் வசதி
இதனைத்தொடாந்து வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மூலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல் ஏதேனும் உள்ளதா? அதற்கான காரணங்கள், பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் உள்ளதா?, போதிய மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆசிரியர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
முன்னதாக நாமக்கல்-எருமப்பட்டி செல்லும் வழியில் மணல் ஏற்றி சென்ற லாரி டிரைவரிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? என கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.