குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்
திருப்பத்தூரில் ஆஸ்பத்திரியில் புகுந்து வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஆஸ்பத்திரியில் புகுந்து வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலிபர் கொலை
திருப்பத்தூர் டவுன் டி.எம்.சி. காலனி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த கரியன் என்கின்ற முகிலன் (வயது 31) என்பவர் கடந்த 30-ந் தேதி சிகிச்சைக்கு வந்தபோது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.எம்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் லெப்ட் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டபோது அதேப்பகுதியை சேர்ந்த கபாப் சுரேஷ் என்பவருக்கும் அடிபட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சாலை மறியல்
பின்னர் திருப்பத்தூர் அழைத்து வரப்பட்ட கபாப் சுரேஷை வீட்டு காவலில் வைத்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கபாப் சுரேஷ் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கொலை நடந்து 17 நாட்கள் ஆகியும் 4 குற்றவாளிகளில் லெப்ட் சுரேஷை மட்டும் போலீசார் கைது செய்துள்ளதாகவும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்து தப்பி ஓடிய கபாப் சுரேஷ் மற்றும் தமிழ்ச்செல்வன், லோகேஷ் ஆகிய 3 பேரையும் தற்போது வரை கைது செய்யவில்லை என கூறிகொலை செய்யப்பட்ட முகிலனின் பெற்றோர்கள் மற்றும் கலைஞர் நகர் பகுதி மக்கள் திருப்பத்தூர்- சேலம் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.