திருச்செங்கோடு நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகத்துக்கு ‘சீல்’-அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருச்செங்கோடு நகராட்சியில் சொத்துவரி பாக்கி செலுத்தாத வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்:
ரூ.15 கோடி நிலுவை
திருச்செங்கோடு நகராட்சியில் சொத்து வரி, நகராட்சி கடைகளுக்கான வாடகை பாக்கி என ரூ.15 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதனால் நகராட்சியில் நிதி மேலாண்மை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள வரி, வாடகை பாக்கியை வசூலிப்பதில், நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தும், சொத்து வரி செலுத்தாத வீடுகள், நிறுவனங்களில் குடிநீர் இணைப்பை துண்டித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சில வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் அதிகளவில் வரி மற்றும் வாடகை தொகை செலுத்தாமல் உள்ளன.
எதிர்ப்பு
இந்தநிலையில் வரி மற்றும் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்துமாறும், அவ்வாறு செலுத்தாத பட்சத்தில் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த 9-ந் தேதி நோட்டீசு வழங்கப்பட்டது. நோட்டீசு வழங்கப்பட்டு ஒரு வாரமாகியும் சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை.
இதனால் நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையிலான அதிகாரிகள் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், கடைகளுக்கு சீல் வைக்க சென்றனர். பழைய பஸ் நிலையம் அருகே சொத்துவரி செலுத்தாத வணிக வளாகத்துக்கு சீல் வைக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த கடைகளின் வியாபாரிகள் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரபரப்பு
மேலும் சீல் வைக்க வந்த நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வணிக வளாக உரிமையாளரை சொத்துவரி செலுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது குற்றம் என்றும் கூறினர்.
இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகத்துக்கு சீல் வைத்தனர். இதேபோல் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.