தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்த மனவேதனையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை-பேளுக்குறிச்சி அருகே சோகம்
பேளுக்குறிச்சி அருகே தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்த மனவேதனையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேந்தமங்கலம்:
பிளஸ்-2 மாணவர்
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 46). ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா (38). இந்த தம்பதிக்கு நர்மதா (19) என்ற மகளும், தருண் (17) என்ற மகனும் இருந்தனர். தருண் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ரவி மற்றும் மேகலா இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரவி நாரைக்கிணறு பகுதியில் தனது பெற்றோருடனும், மேகலா சிங்களாந்தபுரம் அருகே உள்ள மேலப்பாளையத்திலும் குடியிருந்து வருகின்றனர். நர்மதா, தருண் ஆகியோர் மேகலாவுடன் வசித்து வந்தனர்.
தாய்-தந்தை பிரிவால் மனவேதனை
பிளஸ்-2 மாணவர் தருண் தாய்-தந்தை பிரிந்து வாழ்வதை எண்ணி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் 2 பேரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தந்தை ரவியை சந்தித்து பேச முயன்றதாக கூறப்படுகிறது.
அவர் வேலை பார்த்த இடங்களுக்கு சென்று பேச நினைத்தும், தருணால் தனது தந்தையை சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் வருத்தம் அடைந்தார். மேலும், தாய்-தந்தை பிரிந்து வாழ்வதை நினைத்து மனவேதனை அடைந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலை தருண் மேலப்பாளையம் செங்கோட்டை காடு பகுதிக்கு தனது தாயின் சேலையுடன் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த ஒரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மேகலா, நர்மதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய தருணின் உடலை பார்த்து, அவர்கள் 2 பேரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தருண் எழுதிய 4 பக்க உருக்கமான கடிதம் அவரது சட்டை பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இருதரப்பினர் வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து போலீசார் தருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவரின் தந்தை ரவி, தாய் மேகலா மற்றும் இவர்களின் உறவினர்கள் திரண்டனர். மேலும் இருதரப்பினரும் தருணின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தாங்கள் தான் இறுதி சடங்கு செய்வோம் என்றும் கூறினர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்பு சம்மதத்துடன் ராசிபுரம் மின் மயானத்தில் தருண் உடல் தகனம் செய்யப்பட்டது. பேளுக்குறிச்சி அருகே தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்த மனவேதனையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.