இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம்
திருவாரூர் நகரில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் நகரில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
திருவாரூர் நகராட்சி பகுதியில் கோழி, ஆடு மற்றும் மீன் இறைச்சி விற்பனையாளர்கள், இறைச்சி கழிவுகள் சரியான முறையில் கையாளப்படுவதில்லை என புகார்கள் எழுந்தது.
இதை தொடர்ந்து இறைச்சி கழிவுகளை முறையாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அபராதம்
கோழி, ஆடு, மீன் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்ட கூடாது. இதை மீறி இறைச்சி கழிவுகளைகொட்டினால் அபராதம் விதிக்கப்படும். தங்கள் கடைகளில் உருவாகும் இறைச்சி கழிவுகளை தங்கள் பொறுப்பில் நெய்விளக்கு தோப்பு குப்பை கிடங்கில் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் ஒப்படைக்க வேண்டும்.
இறைச்சி விற்பனை செய்யும் இடத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆடுவதை கூடத்தில் மட்டுமே ஆடுகளை அறுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
துப்புரவு ஆய்வாளர் தங்கராம், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள். மேற்பார்வையாளர் மற்றும் கோழி, ஆடு. மீன் இறைச்சி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.