வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யவேண்டும்
கம்பம் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்:
கம்பத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான ஏகலூத்து ரோடு, கம்பம்மெட்டு ரோடு, புதுக்குளம் ரோடு, மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் விளையக்கூடிய செந்தூரம், கள்ளாமை, இமாம்பசந்த், அல்போன்சா, காளபாடி, பங்கனபள்ளி மற்றும் நாட்டு மா வகைகள் நல்ல சுவை உள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பூ பூக்கும் காலத்தில் தொடர் மழை பெய்ததால் பூக்கள் முழுவதும் உதிர்ந்து விட்டது. இதனால் மகசூல் குறைந்தது. விலையும் எதிர்பார்த்த அளவில் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாக மாம்பழத்திற்கு போதிய விலை கிடைத்தது. தற்போது இடைத்தரகர்கள் தலையீட்டால் போதிய விலை கிடைக்கவில்லை. எனவே நெல்லிற்கு அரசு கொள்முதல் நிலையம் இருப்பதுபோல், மாம்பழங்களுக்கும் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்காக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர்.