ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு
ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
ஓய்வூதிய நிலுவைத்தொகை, பணிக்கால நிலுவைத்தொகை, பணப்பலன்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைப்பதில் காலதாமதம், காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவதில் சுணக்கம் காட்டுதல், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டு அட்டையை புதுப்பித்து வழங்குவதில் காலதாமதம் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 27 பேர் மனுக்களை கொடுத்தனர்.
மருத்துவ சிகிச்சை
இந்த மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன், இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காப்பீட்டு திட்டத்தில் வழங்கும் மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் வழங்குவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கருவூலத்துறை இணை இயக்குனர் கமலநாதன், துணை இயக்குனர் மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சாந்தி, மாவட்ட கருவூல அலுவலர் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.