ரூ.2 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

ரூ.2 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார

Update: 2022-05-17 17:01 GMT
திருவெண்காடு
சீர்காழி ஊராட்சி ஒன்றியம், திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கோரை வாய்க்கால் புதர்மண்டி கிடந்தது. இதனால் மழைக் காலங்களில் மழைநீர் வடிய முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்ற ஊராட்சி மன்ற தலைவர் பரிந்துரையின் பேரில், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நேற்று சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சீர்காழி ஒன்றியத்தில் மகாத்மாகாந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 37 ஊராட்சிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. வாய்க்கால்களை தூர்வாரும் போது சுமார் 10 மீட்டர் தொலைவிற்கு ஒரு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும்போது, இந்த தொட்டிகள் மூலம் நிலத்தடியில் மழை நீர் சேகரிக்க ஏதுவாக இருக்கும். எனவே வாய்க்கால்கள் தூர்வாரும் போது கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஊராட்சி செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்