விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம்

விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-17 16:54 GMT
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அதாவது 25 யூனிட்டும், புஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அதாவது 30 யூனிட்டும், இதர பயன்பாட்டிற்கு சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அல்லது 10 யூனிட்டும், மண்பாண்டம் தயாரிப்பதற்கு 60 கன மீட்டர் அல்லது 20 யூனிட்டும் வழங்கப்படும். தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதியின் கீழ் கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக மனு செய்வதற்கான நிபந்தனைகள் வருமாறு:- மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண், வண்டல் மண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். விவசாய காரியத்திற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும். நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை), விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று கிராம கணக்குகள் மற்றும் மண், வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்