வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு
புவனகிரி அருகே வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
புவனகிரி,
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த எந்திரம் மூலம் அறுவடை செய்த நெல்லை சுத்தப்படுத்தும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு என்னென்ன இடுபொருட்கள் வழங்கப்படுகிறது, விவசாயிகளுக்கு வழங்க தேவையான இடுபொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதா என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களை முறையாக வழங்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
உபகரணங்கள்
இதையடுத்து ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் உழவு பணி மேற்கொள்ள கலப்பை எந்திரம் மற்றும் 2 பேருக்கு மண்வெட்டி கடப்பாரை உள்ளிட்ட விவசாய உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண்மை துறை துணை இயக்குனர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மை துறை பண்ணை மேலாளர் உண்ணாமலை, துணை வேளாண்மை அதிகாரி மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.